ஊட்டியில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது


ஊட்டியில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது
x
தினத்தந்தி 17 Feb 2021 3:57 PM GMT (Updated: 17 Feb 2021 3:59 PM GMT)

ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.58 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. டீசல் விலை உயர்வால் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து இருக்கிறது.

ஊட்டி,

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. 

கோவையில் இருந்து கனரக வாகனங்களில் எரிபொருட்கள் கொண்டு வந்து விற்பனை நிலையங்களில் நிரப்பப்படுகிறது. ஊட்டியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.86.62, பெட்ரோல் ரூ.94.58, ஸ்பீடு பெட்ரோல் ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சமவெளி பகுதிகளை விட ஊட்டியில் ஒரு லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. அதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது.

ஊட்டியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரையும், பெரிய வெங்காயம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குறைந்து இருந்த வெங்காயம் விலை தற்போது ஏறுமுகமாக உள்ளது. அதேபோல் சமவெளி பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. 

டீசல் விலை உயர்வால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வர லாரி வாடகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7,500 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கட்டுமான பொருட்களின் விலை மேலும் அதிகரித்து இருக்கிறது.
திரும்ப பெற வேண்டும் 

ஒரு யூனிட் எம்.சாண்ட் மணல் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.5 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு செங்கல் ரூ.10-ல் இருந்து ரூ.10.25 பைசாவாகவும் உயர்ந்து உள்ளது. 

டீசல் விலை மேலும் உயர்ந்தால் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிக்கும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story