பேரணாம்பட்டு அருகே கன்றுக்குட்டியை, சிறுத்தை வேட்டையாடி கடித்து குதறியது.


பேரணாம்பட்டு அருகே கன்றுக்குட்டியை, சிறுத்தை வேட்டையாடி கடித்து குதறியது.
x
தினத்தந்தி 18 Feb 2021 7:16 PM IST (Updated: 18 Feb 2021 7:16 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே கன்றுக்குட்டியை, சிறுத்தை வேட்டையாடி கடித்து குதறியது. சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரணாம்பட்டு

சிறுத்தை நடமாட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள், விவசாயத்துடன், கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். 

ஊருக்கு அருகில் வனப்பகுதியையொட்டியுள்ள கோவிந்தன் என்பவருடைய நிலத்தில் கடந்த வாரம் மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த சுமார் 3 வயது கன்றுக் குட்டியை, சிறுத்தை கொன்றது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு லட்சுமி என்பவர் தன்னுடைய நிலத்தில் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2½ வயது கன்றுக்குட்டியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று வேட்டையாடி கொன்றது. 

கடித்து குதறியது

இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமி என்பவர் தான் வளர்த்து வரும் 3 பசு மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி விட்டு வீடு திரும்பினார்.

நேற்று காலை லட்சுமி நிலத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 1½ வயதுள்ள ஆண் கன்றுக் குட்டி இறந்து கிடந்தது. அதன் வயிற்று பகுதியில் சிறுத்தை கடித்து குதறியிருந்தது. இதைபார்த்த லட்சுமி கதறி அழுதார். 

கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை

பின்னர் இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உடன் வனவர் தரணி, வனகாப்பாளர் செல்வம், வனக் காவலர் ரவி ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது தங்கள் கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால்  பீதியடைந்திருப்பதாகவும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் வனப்பகுதியையொட்டி உள்ள நிலங்களுக்கு இரவு நேரத்தில் யாரும் செல்ல வேண்டாம், வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்லவோ, விறகு எடுக்கவோ செல்லக் கூடாது என தண்டோரா போட்டு கிராமம் முழுவதும் சென்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story