பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் நடுரோட்டில் உலா வந்த காட்டு யானை
பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் நடுரோட்டில் காட்டு யானை உலா வந்தது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதாலும், மழை இல்லாததாலும் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் வறண்டு காணப்படுகின்றன.
இதனால் நீர்நிலைகளை தேடி யானை உள்ளிட்ட விலங்குகள் சமவெளி பகுதிக்கு வருகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதை ஆழியாறில் நேற்று முன்தினம் ஆண் யானை நடுரோட்டில் உலா வந்தது.
அப்போது வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது காட்டு யானை உலா வந்ததை பார்த்ததும் டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். ஆனாலும் அந்த யானை பஸ்சை நோக்கி மெதுவாக நடந்து வந்தது.
இதைக்கண்ட டிரைவர் பஸ்சை பின்நோக்கி இயக்கினார். இதற்கிடையில் சிறிது தூரம் வந்த யானை பின்னர் ஆழியாறு அணைக்கு இறங்கி, வனப்பகுதிக்குள் சென்றது. அரசு பஸ் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை பின்னால் இயக்கியதால் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி ஆழியாறு வனப்பகுதியில் காட்டு யானைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அணைக்கு தண்ணீர் குடிக்க வருகின்றன. எனவே வால்பாறை மலைப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.
பஸ், கார்களில் பாடல்களை ஒலிபரப்ப கூடாது. சிலர் சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டு செல்கின்றனர். சத்தத்தை கேட்டு யானைகள் மிரண்டு விடுகின்றன. இதனால் வனவிலங்குகள் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
யானைகளை பார்த்தால் சத்தம் போடாமல் அமைதி காக்க வேண்டும். அவற்றை விரட்டுவதோ அல்லது அருகில் சென்று செல்பி எடுக்கவோ முயற்சிக்க கூடாது.
மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story