மூலனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி ஆடு மேய்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம்
மூலனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலியானார். ஆடு மேய்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
மூலனூர்,
மூலனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலியானார். ஆடு மேய்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவி
மூலனூர் அருகே உள்ள மேற்குபதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முருகாத்தாள். இவர்களுடைய மகள்கள் கார்த்திகை செல்வி (வயது 13), தீபஜோதி (7), மகன் ஸ்ரீராம் (7). இதில் கார்த்திகை செல்வி மூலனூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கிருஷ்ணன் தனது வீட்டில் ஆடுகளை வளர்ந்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், கார்த்திகை செல்வியும், அவளுடைய தங்கை தீபஜோதியும் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதன்படி நேற்று வழக்கம் போல் இருவரும் ஆடுகளை உடையாம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஓட்டிச்சென்றனர். அங்கு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அந்தபகுதியில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கார்த்திகை செல்வி கொண்டு சென்ற குச்சி விழுந்து விட்டது. 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த குச்சியை எடுக்க முயன்றபோது கார்த்திகை செல்வி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டாள்.
உடல் மீட்பு
இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கார்த்திகை செல்வியின் தங்கை தீபஜோதி, அக்காளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார். சிறுமியின் அபயக்குரல் கேட்டு, அந்த பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த முருகாத்தாள் பதறி துடித்து ஓடிவந்தார். முருகாத்தாளுக்கு நீச்சல் தெரியும் என்பதால், உடனே கிணற்றுக்குள் குதித்து மகளை தேடினார். ஆனால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குள் கார்த்திகை செல்வி தண்ணீருக்குள் மூழ்கினார்.
இது குறித்து மூலனூர் போலீசாருக்கும், தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து கிணற்றுக்குள் கம்பி வளைத்தை போட்டு, கார்த்திகை செல்வியை தேடினர். ஒரு மணிநேர தேடலுக்கு பிறகு, உயிரிழந்த நிலையில், கார்த்திகை செல்வியின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆடு மேய்க்க சென்ற மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story