ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி,
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் 31-ந் தேதி வரை நிலுவையில் இருந்த விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆனைமலை தொடக்க வேளண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு சங்கங்களில் கடந்த 31-1-2021 அன்று நிலுவையில் இருந்த பயிர்கடனை தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கடந்த ஜனவரி, டிசம்பர் மாதங்களில் முன்கூட்டியே கடன் தொகையை செலுத்திவிட்டோம். ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக குளறுபடி காரணமாக டிசம்பர், ஜனவரியில் கொடுக்க வேண்டிய கடன் தொகையை 2 மாதமாக வழங்கவில்லை.
இதன் காரணமாக 41 விவசாயிகள் தள்ளுபடி சலுகையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாயிகளுக்கு கடன் தொகையை வழங்கி, அதை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆனைமலை, ராமசந்திராபுரம், குப்புச்சிபுதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயிர்கடன் பெற்று வருகின்றனர்.
வழக்கமாக கடன் தொகையை செலுத்தி, புதுப்பித்த ஒரு வார காலத்திற்குள் மீண்டும் கடன் தொகை வழங்கப்படும். ஆனால் டிசம்பர், ஜனவரி மாதம் கடன் தொகையை செலுத்தியதும் இன்னும் கடன் தொகை வழங்கவில்லை. இதனால் அரசின் தள்ளுபடி சலுகையை 41 விவசாயிகள் இழந்து உள்ளனர்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசுவை சந்தித்தும் மனு கொடுத்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story