குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ராமநாதபுரம் பஸ்நிலையம் அருகே குழாய் உடைந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருகின்றது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பஸ்நிலையம் அருகே குழாய் உடைந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருகின்றது.
குழாய் உடைப்பு
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைப்பெடுத்து குடிநீர் வீணாகி வருகின்றது. ராமநாதபுரம் நகராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக நகர் முழுவதும் 80 கி.மீ. தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது.
காவிரி படுகையான முக்கொம்பில் இருந்த 330 கி.மீ. தூரத்திற்கு பம்ப் செய்யப்பட்டு அந்த தண்ணீர் ராமநாதபுரம் வந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றது. நீரின் அழுத்தம் காரணமாக ஆங்காங்கே குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
நடவடிக்கை தேவை
குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைப்பை சரி செய்து அப்பகுதியில் வால்வு பொருத்தி தண்ணீர் வீணாவதை தடுத்து வருகின்றனர். பயன்படுத்தப்படும் பொருட்களின் தரமற்ற தன்மையால் ஏற்கனவே பழுது நீக்கப்பட்ட பகுதியிலேயே மீண்டும், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகின்றது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கி போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஏற்கனவே குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வரும் வேளையில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் இப்படி வீணாவது பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது.
ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகே அம்மா உணவகத்தின் பக்கத்தில் காவிரி குடிநீர் குழாய் இவ்வாறு உடைந்து தண்ணீர் வீணாகி வருகின்றது. மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீரும் சேர்ந்தும் சுகாதார கேடு மற்றும் நோய் பரவும் ஆபத்தும் எற்பட்டுள்ளது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினர், நகராட்சி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் புதிய பஸ் நிலைய வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story