நெல்லையில் இருந்து கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம், ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்
நெல்லையில் இருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
நெல்லை:
தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அவரிடம் ஞானதிரவியம் எம்.பி. கோரிக்கை மனு வழங்கினார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நெல்லை தியாகராஜநகரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட ஆயத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, அந்த பணிகள் பாதியிலேயே நிற்கிறது. அதேபோல் குலவணிகர்புரம் ரெயில்வே கேட்டில் பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக்கடையம் பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னைக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்.
இதேபோன்று நெல்லையில் இருந்து தென்காசி, கொல்லம் வழியாக மங்களூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட நெல்லை-செங்கோட்டை, நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி பாஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
பணகுடி ரெயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் நாகர்கோவில்- தாம்பரம் ரெயிலை தினமும் இயக்க வேண்டும்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்த கூட்டுறவு பண்டகசாலை கங்கைகொண்டான் ரெயில் நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளது. எனவே 6-வது பிளாட்பாரத்தில் இருந்து ரெயில்களை இயக்க வேண்டும். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு மேற்கு பக்கத்தில் பயணிகள் வந்து செல்லும் வகையில் பாதையை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story