ஆத்தூர் பகுதியில் பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு


ஆத்தூர் பகுதியில்  பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 6:07 AM IST (Updated: 19 Feb 2021 6:09 AM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்தூர் பகுதியில் பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆத்தூர்,

ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் அதிகமான பொக்லைன் எந்திரங்கள் உள்ளன. இந்த நிலையில் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் உரிமையாளர்கள் நேற்று தங்களது பொக்லைன் எந்திரங்களை ஆத்தூர் விநாயகபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நிறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தன.

இது குறித்து பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.பி. வேலு கூறியதாவது:-

காப்பீட்டுத்தொகை

தற்போது டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் உதிரிபாகங்கள், வாகனத்திற்கான வரி, காப்பீட்டுத்தொகை போன்றவையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எங்களால் பொக்லைன் எந்திரத்தை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். மத்திய-மாநில அரசுகள் டீசல், உதிரிபாகங்கள், காப்பீட்டுத்தொகை போன்றவற்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story