ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை: கடைகளில் இலவசமாக வழங்கப்படும் கறிவேப்பிலைக்கு ‘கிராக்கி’ இல்லத்தரசிகள் அதிர்ச்சி


ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை: கடைகளில் இலவசமாக வழங்கப்படும் கறிவேப்பிலைக்கு ‘கிராக்கி’ இல்லத்தரசிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 19 Feb 2021 9:32 AM IST (Updated: 19 Feb 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆவதால் இலவசமாக வழங்கப்பட்டு வந்த கறிவேப்பிலைக்கு கடைகளில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, 

காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறி வாங்கிய பிறகு, இலவசமாக வழங்கப்படுவது கறிவேப்பிலை. எந்த கடையில் அதிகமான கறிவேப்பிலை கொடுக்கிறார்களோ? அந்த கடையில் சென்று வழக்கமாக காய்கறி வாங்குபவர்களும் உண்டு.

அந்த வகையில் வியாபார உத்திக்கு மூலதனமாக இருந்து வரும் கறிவேப்பிலைக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கறிவேப்பிலை விலை, வரத்து குறைவால் கிடுகிடுவென உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

விலை குறைவாக இருந்தபோது வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கடைகளில் வழங்கிய வியாபாரிகள் தற்போது மூடி மறைத்து வைத்து, கொத்தாக அள்ளிக்கொடுத்த காலம்போய், ஒவ்வொரு இணுக்காக (சிறுகிளை) எண்ணி கொடுக்கிறார்கள்.

கறிவேப்பிலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். குழம்பு உள்பட உணவு வகைகளில் அள்ளி தூவிய இல்லத்தரசிகள் தற்போது கிள்ளி தூவும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

வரத்து குறைவு

இதேபோல், மற்ற காய்கறி வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்தே இருக்கிறது. அதிலும் சாம்பார் வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டிலேயே ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.130 வரை விற்பனை ஆனது. சில்லரை கடைகளில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர, முருங்கைக்காய் விலையும் சதம் அடித்து இருக்கிறது. ஒரு கிலோ ரூ.110 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவு காரணமாக இந்த காய்கறி வகைகளின் விலை உயர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், சில வியாபாரிகள் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பால் வாடகையும் உயர்ந்து, அதன் தாக்கமும் இதில் ஏற்படுகிறது எனவும் கூறுகிறார்கள்.

Next Story