தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்து 2 பேர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி மோதியது
ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு பெயிண்டு லோடு் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. லாரியை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கண்ணன் (45) என்பவர் ஓட்டி வந்தார்.
தொப்பூர் கணவாயை கடந்த போது, திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு லாரி பழுதாகியது. இதையடுத்து தொப்பூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே உள்ள தனியார் ஓட்டல் முன்பு தேசிய நெடுஞ்சாலையோரம் அந்த லாரி நிறுத்தப்பட்டது.
பழுதான லாரி நிறுத்தி வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, வேலூரில் இருந்து சேலத்திற்கு சிமெண்டு கலவை லோடு ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஏற்கனவே பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.
2 பேர் படுகாயம்
இந்த விபத்தில் சிமெண்டு லோடு லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணதாசன் (வயது 30) கிளீனர் ராஜதுரை (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச் சாவடி ரோந்து பணியாளர்கள் ஒன்றிணைந்து விபத்தில் சிக்கி தவித்த கண்ணதாசன் மற்றும் ராஜதுரையை மீட்டு சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சாலையில் மோதி நின்ற இரு லாரிகளையும் சுங்கச்சாவடி பணியாளர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story