புதுச்சத்திரம் அருகே பரபரப்பு: கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
புதுச்சத்திரம் அருகே பரபரப்பு: கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே மரத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதல் ஜோடி
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே ஏளூர் ஏரி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஏரி அருகே கொண்டு சென்றனர். அப்போது ஏரியின் அருகே உள்ள மரத்தில் ஒரு ஆண் பிணம் தொங்கி கொண்டு இருந்தது. அதே மரத்தடியில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனடியாக புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிணமாக கிடந்த ஆண், பெண் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.
மொபட்டில் சென்றனர்
மேலும் இறந்து கிடந்த ஆண் நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 45) என்பதும், பெண் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் என்பவரின் மனைவி சசிகலா (28) என்பதும் தெரியவந்தது. இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்ததும், ஏற்கனவே இருமுறை இந்த ஜோடி வீட்டை விட்டு வெளியே சென்று பின்னர் வீடு திரும்பி இருப்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே கடந்த 16-ந் தேதி மொபட்டில் வெளியே சென்ற இருவரும் ஏளூர் ஏரிக்கரையில் சசிகலாவின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதும், சேலையின் ஒரு பகுதி கிழிந்து விட்டதால் தூக்கில் இருந்து சசிகலா உடல் கீழே விழுந்ததும் தெரியவந்தது. அவர்கள் சென்ற மொபட்டை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதல் ஜோடியான கோவிந்தராஜூக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளும், சசிகலாவுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
======
Related Tags :
Next Story