காவேரிப்பட்டணத்தில் முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
காவேரிப்பட்டணத்தில், முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணத்தில் முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவருடன் வந்த கூட்டாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அண்ணா நகரை சேர்ந்தவர் சகிலா (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு, தனது தோழியான ஜெரினா (55) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், முகவரி கேட்பது போல் அவர்களிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சகிலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து கொண்டு தப்ப முயன்றனர். அப்போது சகிலா மற்றும் ஜெரினா கூச்சலிட அங்கிருந்த பொதுமக்கள், தப்ப முயற்சி செய்த வாலிபர்களை பிடிக்க முயற்சித்தனர்.
வாலிபர் சிக்கினார்
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த ஒருவனை மட்டும் கீழே தள்ளி பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்ற வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட வாலிபரை காவேரிப்பட்டணம் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
அந்த வாலிபர் கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளதால், காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும், சகிலா கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.
இதில் பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்டு பிடிபட்ட வாலிபர், கிருஷ்ணகிரி தர்கா பகுதியை சேர்ந்த சதாம்உசேன் மகன் முகமதுஉசேன் (19) என்பதும், மோட்டார் சைக்கிளை ஓட்டி தப்பிச்சென்றவர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை சேர்ந்த சதீஸ்குமார் (30) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து முகமதுஉசேனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த 2 பவுன் தங்க நகையை மீட்டதுடன், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற சதீஷ்குமாரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story