திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 19 Feb 2021 6:14 AM GMT (Updated: 19 Feb 2021 6:14 AM GMT)

திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பள்ளிப்பட்டு,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில் சமூக இடைவெளியுடன், அரசு கூறிய வழி காட்டுதலுடன் முக கவசம் அணிந்து பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கினார்.

இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை கோவில் வளாகத்தில் கணபதி பூஜையுடன் மாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

கொடியேற்றினார்

நேற்று காலை கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கோவில் தலைமை குருக்கள் சுதாகர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். அதன்பிறகு வள்ளி, தெய்வானை, உடனுறை முருகபெருமான் சிறப்பு அலங்காரத்துடன் இந்திர விமானத்தில் மாட வீதியில் உலா வந்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 11 மாதங்களாக முருகபெருமான் மாட வீதி உலா நடைபெறவில்லை. 11 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக மாடவீதியில் உற்சவர் முருகபெருமான் வள்ளி, தெய்வயானையுடன் ஊர்வலமாக வந்தார்.

பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி உற்சவர் முருகபெருமான் தினந்தோறும் பலவித வாகனங்களில் மாடவீதியில் ஊர்வலமாக வருவார். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பழனிகுமார், கோவில் தக்கார் ஜெய்சங்கர், உதவி ஆணையர் ரமணி உள்பட கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story