வேலூர் விமான நிலையத்துக்கு தரைவழி மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு.


வேலூர் விமான நிலையத்துக்கு தரைவழி மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு.
x
தினத்தந்தி 19 Feb 2021 5:55 PM IST (Updated: 19 Feb 2021 5:55 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் விமான நிலையத்துக்கு தரைவழி மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

விமான நிலையம்

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. பல ஆண்டுகளாக பயன்படாமல் இருந்த இந்த விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான பணிகள் தொடங்கியது. விமான நிலையத்தில் ஓடுதளம், டெர்மினல் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதன் நடுவே செல்லும் தார்வழி சாலை, விமான நிலையத்துக்கு தேவைப்பட்டதால் அவை ஒப்படைக்கப்பட்டு, அந்த சாலையை பயன்படுத்திய மக்களுக்கு மாற்றுப்பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு மின் வசதிக்காக தரைவழியாக மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின்கம்பிகள் அமைக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மின் கம்பிகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எதிர்ப்பு
இந்த நிலையில் நேற்று இப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தன் நிலத்தின் வழியாக மின் கம்பிகள் பதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். அந்த நபருக்கு ஆதரவாக சிலர் பேசினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. 

தகவல் அறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த வாக்குவாதம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தாசில்தார் ரமேஷ் கூறுகையில், ‘‘மின் கம்பிகள் அமைக்க ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். பூமிக்கு அடியில் தண்ணீர் குழாய் வருவதாகவும், மின் கம்பிகள் அமைத்தால் நீரில் மின்சாரம் பாயும் என அச்சம் கொண்டார். பாதிப்புகள் ஏதும் ஏற்படாது’’ என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலம் தொடர்பான பிரச்சினையில் அளவீடு செய்யப்பட்டு, மின்கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

Next Story