ஆதிச்சநல்லூரில் 2-ம் கட்ட அகழாய்வுக்கு ஆயத்தப்பணி தொடக்கம்
ஆதிச்சநல்லூரில் இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு ஆயத்தப்பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூரில் இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு ஆயத்தப்பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அகழாய்வு
ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டு மே 25-ந்தேதி மாநில அரசு சார்பில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் தொடர்ந்து 4 மாத காலம் நடந்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்பாண்ட பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், வாழ்விடபகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டும் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்தாண்டு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என மூன்று இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளது. மேலும் தாமிரபரணி கரையில் அகழாய்வு நடைபெறும் இடங்களை தேர்வு செய்யும் பணியும் தொடரும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆயத்தப்பணி
இதற்கான முதற்கட்ட பணியாக ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள உள்ள இடத்தினை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த இடத்தில் ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த இடங்களில் உள்ள முற்செடிகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை ஆதிச்சநல்லூர், கால்வாய், புளியங்குளம், வீரளபேரி போன்ற இடங்களிலும், சிவகளையில் ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம், சிவகளை பரம்பு, சிவகளைசெக்கடி, ஆவாராங்காடு திரடு, பொட்டல்கோட்டை திரடு, பராக்கிரபாண்டி திரடு, வெள்ளத்திரடு, பேரூர் திரடு போன்ற இடங்களிலும் இந்தாண்டு அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story