ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா தொடக்கம்


ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 19 Feb 2021 10:00 PM IST (Updated: 19 Feb 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பூவராகசுவாமி பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத யக்ஞவராகபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடி  மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மாசிமக விழா கொடியேற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இரவில் சிம்ம வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. 

தங்க கருட சேவை

விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், ஹம்ச, சேஷ, அனுமந்த, யானை வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது. 21-ந்தேதி தங்க கருட சேவை நடக்கிறது. மேலும் 25-ந்தேதி தங்க தோளுக்கினியான் வாகனத்தில் கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி ஆட பெருமாள் புறப்பாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நரசிங்கப்பெருமாள், அர்ச்சகர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Next Story