கடலூர் மாவட்டத்தில் உள்ள 66 அம்மா மினி கிளினிக்கில் பணியாற்ற டாக்டர்கள், செவிலியர்களுக்கு நோ்காணல்


கடலூர் மாவட்டத்தில் உள்ள 66 அம்மா மினி கிளினிக்கில் பணியாற்ற டாக்டர்கள், செவிலியர்களுக்கு நோ்காணல்
x
தினத்தந்தி 19 Feb 2021 4:30 PM GMT (Updated: 19 Feb 2021 4:30 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் உள்ள 66 அம்மா மினி கிளினிக்கில் பணியாற்ற டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கான நேர்காணல் கடலூரில் நடந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நல வாழ்வு சங்கம் சார்பில் மாவட்டத்தில் செயல்படும் 66 அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்ற டாக்டர்கள் (மருத்துவ அலுவலர்), செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் ஆகிய தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் இதற்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கடந்த 15-ந்தேதி கடைசி நாள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்தனர். அதாவது 66 டாக்டர்கள் பதவிக்கு 207 பேரும், 66 செவிலியர் பணியிடங்களுக்கு 508 பேரும், 66 பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணிக்கு 666 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

நேர்காணல்

அவர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இந்த நேர்காணலில் பங்கேற்க விண்ணப்பித்த கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களும் நேற்று கடலூர் சில்வர் பீச் சாலையில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் குவிந்ததால் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

பின்னர் அவர்களை பதவி அடிப்படையில் பிரித்து, நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு நேர்காணலை நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் நடத்தினர். டாக்டர்களிடம், அம்மா மினி கிளினிக் என்றால் என்ன? அதில் தங்களுக்கான பணி என்ன? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் உரிய பதில் அளித்தனர்.

தேர்வு

அதில் திறமை வாய்ந்த 66 டாக்டர்களை தேர்வு செய்தனர். இதேபோல் செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவபணியாளர்களுக்கான நேர்காணலும் நடந்தது. இதில் செவிலியர் பதவிக்கான நேர்காணல் நேற்று 3-வது நாளாக நடந்தது. இதிலும் தலா 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் விரைவில் வழங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story