குழந்தையின் இதய சிகிச்சைக்கு அரசு ஏற்பாடு
மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பெண் கோரிக்கை: குழந்தையின் இதய சிகிச்சைக்கு அரசு ஏற்பாடு
தேனி:
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தி.மு.க. சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த கூட்டத்தில் தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் நகரை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் மனைவி நந்தினி பேசும் போது, தனது 1½ வயது மகள் யாழினிக்கு இதயத்தில் ஓட்டை உள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்றும், காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கு ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், அந்த பெண்ணுக்கு அரசு முன்வந்து உதவி செய்ய வேண்டும் என்றும், 24 மணி நேரத்துக்குள் செய்யாவிட்டால் தி.மு.க.வே உதவி செய்யும் என்றும் உறுதி அளித்தார்.
இந்நிலையில், குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு சார்பில் நேற்று உதவி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாய் நந்தினி கூறுகையில், "மு.க.ஸ்டாலினிடம் குறை தெரிவித்த நிலையில், ஒரே நாளில் எனக்கு ஸ்மார்ட் கார்டு கிடைத்து விட்டது.
நாகர்கோவிலில் சிகிச்சை அளிக்கவும் அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். எங்களின் போக்குவரத்து செலவுக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 ஆயிரம் கொடுத்து உதவி உள்ளனர்" என்றார்.
முன்னதாக நேற்று நந்தினியின் வீட்டுக்கு தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் சென்று, சிகிச்சைக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து செலவுக்கு நிதி உதவி அளித்தனர்.
Related Tags :
Next Story