ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
வேட்டைக்காரன்புதூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. மேலும் வெல்டிங் வைத்தபோது தீப்பிடித்ததால் மர்ம ஆசாமி தப்பி ஓடினார்.
பொள்ளாச்சி
வேட்டைக்காரன்புதூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. மேலும் வெல்டிங் வைத்தபோது தீப்பிடித்ததால் மர்ம ஆசாமி தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொள்ளை முயற்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் ஒரு தனியார் வங்கி உள்ளது. அதனருகில் ஏ.டி.எம். மையம் இருக்கிறது. இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்தார்.
பின்னர் வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தார். ஆனால் திடீரென ஏ.டி.எம். எந்திரம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடினார்.
தீ அணைப்பு
இதற்கிடையில் அந்த வழியாக வந்தவர்கள் ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கும், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இதையடுத்து அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமிபாண்டியன், உதயசந்திரன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் தப்பியது
பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு கிடைத்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். மேலும் கோவையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவாகி இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.
இதுகுறித்து வங்கி அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சியில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் தப்பியது.
கேமராவில் மாட்டுச்சாணம் வீச்சு
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
அந்த ஏ.டி.எம். மையத்தில் ஏற்கனவே கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. தற்போது 3-வது முறையாக கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த மர்ம ஆசாமி, மாட்டுச்சாணத்தை எடுத்து கேமராவை நோக்கி வீசி உள்ளார்.
அந்த சாணம் கேமராவில் ஒட்டி உள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் சாணம் கீழே விழுந்தது. இது தெரியாமல் அந்த மர்ம ஆசாமி தொடர்ந்து வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதில் திடீரென தீப்பிடித்ததால், அவர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story