சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை - புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் டி.ஐ.ஜி. எம்.பாண்டியன் பேட்டி


சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை - புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் டி.ஐ.ஜி. எம்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2021 11:23 PM IST (Updated: 20 Feb 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் டி.ஐ.ஜி. எம்.பாண்டியன் பேட்டியளித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த கே.எழிலரசன் சென்னை பெருநகர வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அங்கிருந்த இணை ஆணையர் எம்.பாண்டியன் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று காலை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 29-வது டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முழு கவனமும் செலுத்தப்படும். சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றங்களை குறைக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும். ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை ஒடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுப்பதிலும் தனிக்கவனம் செலுத்தப்படும். விழுப்புரம் சரகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து, என்னிடம் குறைகளை தெரிவித்து அதனை தீர்த்துக்கொள்ளலாம். மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. எம்.பாண்டியனின் சொந்த ஊர் அரக்கோணமாகும். இவர் 1998-ம் ஆண்டு காவல் பணியில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை அண்ணாநகர், கீழ்பாக்கம் ஆகிய இடங்களில் துணை ஆணையராகவும், அதன் பிறகு சென்னை பெருநகர (வடக்கு) போக்குவரத்து இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். முன்னதாக டி.ஐ.ஜி. எம்.பாண்டியனுக்கு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story