மீட்கப்பட்ட 4½ கிலோ தங்க நகைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு


மீட்கப்பட்ட 4½ கிலோ தங்க நகைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 11:46 PM IST (Updated: 19 Feb 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கொள்ளையில் மீட்கப்பட்ட 4½ கிலோ நகைகள் நீதிபதி முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகர்கோவில்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கொள்ளையில் மீட்கப்பட்ட 4½ கிலோ நகைகள் நீதிபதி முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆதிகேசவ பெருமாள் கோவில் 
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் ஒன்று. இக்கோவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இங்குள்ள கோவில் கருவறையில் 22 அடி நீளத்தில் சயன நிலையில் கம்பீரமாக ஆதிகேசவ பெருமாள் வீற்றிருக்கிறார். சயன நிலையில் உள்ள பெருமாள் சிலைக்கு விலை மதிக்க முடியாத வைர, வைடூரிய கற்கள் பதித்த கிரீடம், நகைகள், தங்க தகட்டால் ஆன கவசம், மோதிரம், காப்பு போன்றவை அணிவிக்கப்பட்டிருந்தது.
பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட நகைகள் படிப்படியாக வெட்டியெடுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக கடந்த 1989-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதை தொடர்ந்து, திருவட்டார் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கை விசாரித்தனர்.
4½ கிலோ நகைகள் கொள்ளை 
விசாரணையில், சயன நிலையில் உள்ள பெருமாள் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த 6½ கிலோ தங்க நகைகள் திருட்டு போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கோவில் பூசாரிகள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் என தெரியவந்தது.
இதனைதொடர்ந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், அவர்களிடம் இருந்து 4½ கிலோ தங்கத்தை மீட்டனர். இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கோவிலின் தலைமை பூசாரி கேசவன் போற்றி விசாரணைக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார். பின்னர் கொள்ளையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய கோவில் குருக்கள், கோவில் ஊழியர்கள் என 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் 2010-ம் ஆண்டு வரையே வழக்கு விசாரணை நடந்தது. பின்னர் நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
23 பேருக்கு ஜெயில்
 
குற்றம்சாட்டப்பட்ட 34 பேரில் வழக்கு விசாரணையின் போது இடைப்பட்ட காலங்களில் 10 பேர் இறந்து விட்டனர். திருச்சூரை சேர்ந்த கிரு‌‌ஷ்ணன் நம்பூதிரி என்பவர் மட்டும் இந்த வழக்கில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டார். இதனால் மீதமுள்ள 23 பேர் மீது மட்டும் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது.
தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் குற்றவாளி என தீர்ப்பளித்து அவர்களில் 14 பேருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும், 9 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் மற்றும் தனித்தனியாக அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட கோவில் நகைகள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவின்படி நாகர்கோவிலில் உள்ள கருவூலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்து அறநிலையத்துறை குமரி மாவட்டம் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில்“ மீட்கப்பட்ட நகைகள் அனைத்தும் குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறையிடம் விவரத்தை தெரிவித்து ஒப்படைக்க வேண்டும்“ என மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு மீட்கப்பட்ட கோவில் நகைகளின் விவரங்களை தெரிவித்து, அவற்றை மாவட்ட அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
நகைகள் ஒப்படைப்பு 
இந்த நிலையில் மீட்கப்பட்ட 4½ கிலோ நகைகள் கருவூலகத்தில் இருந்து கோர்ட்டு ஊழியர்கள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நீதிபதி கிறிஸ்டியன் முன்னிலையில் நகைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதாவது, சாமிக்கு அணிவிக்கப்படும் காப்பு, வளையல், தண்டை, செயின், மோதிரம், கம்மல், இடுப்பில் அணிவிக்கப்படும் தங்க பட்டி உள்பட சில தங்க கட்டிகள் என மொத்தம் 4½ கிலோ நகைகள் இருந்தன.
இவற்றை ஒரு இரும்பு பெட்டியில் வைத்து நேற்று மாலை நீதிபதி கிறிஸ்டியன், குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவர் சிவக்குற்றாலத்திடம் ஒப்படைத்தார். அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் உடனிருந்தனர். இதனைதொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க நகைகள் உள்ள இரும்பு பெட்டியை காரில் ஏற்றி சுசீந்திரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

Next Story