நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:50 AM IST (Updated: 20 Feb 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள ஆச்சாள்புரம், நல்லூர், பழையபாளையம், மாதிரவேளூர், கடவாசல், மாதானம், வடரங்கம், அகரஎலத்தூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மாதிரவேளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நேரடி கொள்முதல் நிலைய பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சம்பத் முன்னிலை வகித்தார்.
தடையின்றி கொள்முதல்
ஆர்ப்பாட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
 கொள்முதல் நிலையங்களில் வேலை பார்த்து வரும் தகுதியுள்ள பட்டியலில் உள்ள பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட வசதிகளை அமல்படுத்த வேண்டும். 
ஆய்வு என்ற பெயரால் ஊழியர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை சிரமப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கையடக்க கருவியை பயன்படுத்தி மாதம் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story