காந்தி சிலை அகற்றம் கரூரில் காங்கிரஸ்-தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதால் காங்கிரஸ்-தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்:
கரூர் லைட்ஹவுஸ் அருகே கடந்த 1954-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு சார்பில் காந்தி சிலை நிறுவப்பட்டது. காந்தி பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு இருந்த காந்தி சிலை திடீரென அகற்றப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் பேங்க் சுப்பிரமணி தலைமையில் காங்கிரசார் மற்றும் தி.மு.க.வினர் நேற்று ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று காந்தி சிலை எதற்காக அகற்றப்பட்டது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு, நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியதன்பேரில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சென்று கேட்டதற்கு அவர்களும் தெரியாது என கூறியதாக தெரிகிறது.
இதனால், மீண்டும் லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே கட்சியினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகாத்மா காந்தி சிலை எதற்காக அகற்றப்பட்டது?, அகற்றப்பட்ட சிலை எங்கே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு போலீசார் அகற்றப்பட்ட சிலை நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதாகவும், அகற்றப்பட்ட இடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு காந்தி சிலை மீண்டும் அமைக்கப்படும் என்று கூறினர். அதற்கு காங்கிரசார், சிலையை அகற்றும் முன்பு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை, எந்த திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அதற்கான பணி ஆணையினை காண்பிக்குமாறு கேட்டனர். அதற்கான பணி ஆணை மாலை தருவதாக கூறியதையடுத்து கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். காந்தி சிலை அகற்றப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காந்திசிலை அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், இன்றைக்குள்(சனிக்கிழமை) சிலையை மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story