கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் மாசிமக திருவிழா
கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கரூர்:
கரூர் தாந்தோன்றிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக திருத்தேர் மற்றும் தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. மேலும் உற்சவர் பெருமாள், ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கரூர், திருமாநிலையூர், தாந்தோன்றிமலை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்பக விமானம், குதிரை வாகனம் ஆகியவற்றில் தினமும் பெருமாள் வீதியுலா புறப்படுகிறார்.
வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 27-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அடுத்தமாதம் 1-ந் தேதி தெப்பத்தேர் நடக்கிறது. அன்றைய தினம் கோவில் தெப்பக்குளத்தில் பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருகிற மார்ச் 8-ந்தேதி புஷ்ப யாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story