கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை


கட்டிட மேஸ்திரி வீட்டில்  ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 Feb 2021 2:31 AM IST (Updated: 20 Feb 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே நள்ளிரவில் கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர், 

நெல்லிக்குப்பம் அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் பின்பக்க கதவை பூட்டி விட்டு, வீட்டின் முன்புள்ள வராண்டாவில் குடும்பத்துடன் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வேல்முருகன், பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை நெம்பி திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

கொள்ளைபோன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story