குமரி-கேரள அதிகாரிகள் ஆலோசனை


குமரி-கேரள அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 20 Feb 2021 8:04 PM IST (Updated: 20 Feb 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நேரத்தில் மது கடத்தலை தடுக்க குமரி மாவட்டம் மற்றும் கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

நாகர்கோவில்:
தேர்தல் நேரத்தில் மது கடத்தலை தடுக்க குமரி மாவட்டம் மற்றும் கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம் 
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு எல்லையோர மாவட்டமான கேரள மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அதிகாரிகளுடன் குமரி மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தேர்தலையொட்டி மதுபானங்கள் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு கடத்தப்படுவதை தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழக-கேரள எல்லை சோதனை சாவடிகளை பலப்படுத்துவது மற்றும் கூடுதலாக தேவைப்படுகின்ற இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
சோதனை சாவடிகள் 
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசும் போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, பளுகல் நெட்டா, காக்காவிளை ஆகிய சோதனை சாவடிகளையும், கேரள எல்லை சோதனை சாவடிகளான செருவார கோணம், பாறசாலை, வெள்ளறடா ஆகியவற்றையும் பலப்படுத்த வேண்டும்.
மதுபானங்கள் அனுமதியின்றி கொண்டு செல்வதை தடுக்க சோதனை சாவடிகளில் பணியாற்றும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இரு மாநிலங்களிலும் மதுபான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும், இரு மாநில எல்லையோர போலீசார் கூட்டாக ஒருங்கிணைந்து மதுபான குற்றங்களை தடுப்பதற்கு விழிப்புடன் பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள போலீஸ் அதிகாரிகள் 
போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேசுகையில், தமிழக- கேரள எல்லையோர வனப்பகுதிகள் வழியாகவும் மதுபானங்கள் கொண்டு செல்லப்படலாம். எனவே தேர்தல் நேரத்தில் கேரள பகுதியிலுள்ள மதுபான கடைகள் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தேர்தல் அட்டவணை வெளியானவுடன் சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். கடற்கரை வழியாக கடத்தல் நடைபெறாமல் தடுத்திட கடலோர காவல் படை மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி போலீஸ் சூப்பிரண்டு (குளச்சல்) விஸ்வே‌‌ஷ் சாஸ்திரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story