விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பலத்த மழை
விழுப்புரம்,
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்றுடனும், இடி- மின்னலுடனும் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரமாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் 2 மணியளவில் பெய்யத்தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், ரெயில்வே மைதானம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம் மழையினால் சேறும், சகதியுமாக மாறியது. பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. ஆனால் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு உடனடியாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரும் மின்மோட்டார் மூலம் உடனே வெளியேற்றப்பட்டது.
இந்த மழையினால் விழுப்புரம் நகரில் இரவு 11.45 மணியளவில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் மின்சார வினியோகம் சீரானது. இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story