வாக்குச்சாவடி அலுவலர்களின் பயிற்சிக்காக சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


வாக்குச்சாவடி அலுவலர்களின் பயிற்சிக்காக  சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 10:41 PM IST (Updated: 20 Feb 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

விழுப்புரம், 

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,957 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன.தற்போது கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக 1,050 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடி மையத்தை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி மையம் அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு 411 துணை வாக்குச்சாவடி மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2,368 வாக்குச்சாவடி மையங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக தற்போது விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்கு எந்திரங்களான பேலட் யூனிட் 4,097 எந்திரங்களும், கண்ட்ரோல் யூனிட் 3,068 எந்திரங்களும், வாக்குப்பதிவை உறுதி செய்திடும் எந்திரங்களான வி.வி.பேட் எந்திரங்கள் 3,155-ம் தயார் நிலையில் உள்ளன.

5 சதவீத வாக்கு எந்திரங்கள்

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்திரங்கள் முதல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் 5 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி விழுப்புரத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கு அறை, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அண்ணாதுரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் 5 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு

அதாவது செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், மயிலம் தொகுதிக்கு 15 எந்திரங்களும், திண்டிவனம் தொகுதிக்கு 16 எந்திரங்களும், வானூர் தொகுதிக்கு 16 எந்திரங்களும், விழுப்புரம் தொகுதிக்கு 19 எந்திரங்களும், விக்கிரவாண்டி தொகுதிக்கு 17 எந்திரங்களும், திருக்கோவிலூர் தொகுதிக்கு 17 எந்திரங்களும் ஆக மொத்தம் 118 எந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.
அப்போது கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து முதலில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், ஒவ்வொரு நாளும் எத்தனை வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி மேற்கொண்டனர் என்ற விவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளும் பயிற்சி அளிக்கவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தாலுகா அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களை வெளியே கொண்டு செல்லும்போது போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும். பயிற்சி முடிந்ததும் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து அன்று மாலையே அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து வைக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சரக்கு வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

Next Story