நடத்தையில் சந்தேகம்: மனைவியை அரிவாளால் வெட்டிய விவசாயி தற்கொலை
பாகலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட விவசாயி அவரை அரிவாளால் வெட்டி விட்டு, அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள நாரிபுரத்தை சேர்ந்தவர் ஒசராயப்பா (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி லட்சுமம்மா (45). மது பழக்கத்திற்கு அடிமையான ஒசராயப்பா மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் லட்சுமம்மா புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் சென்ற ஒசராயப்பா மனைவியிடம் தகராறு செய்து அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த லட்சுமம்மாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மனைவியை அரிவாளால் வெட்டிய ஒசராயப்பா அருகில் உள்ள மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒசராயப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை அரிவாளால் வெட்டிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story