கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு


கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 10:58 PM IST (Updated: 20 Feb 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நேற்று கும்பகோணத்தில் நடைபெற இருந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்:-
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நேற்று கும்பகோணத்தில் நடைபெற இருந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய மாவட்டம் கோரி ஊர்வலம்
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று தனி மாவட்டம் கோரும் போராட்டக் குழுவின் சார்பில் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளும் ஊர்வலம் நடைபெறுவதாக போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர். 
இந்த ஊர்வலம் கும்பகோணம் மொட்டைக்கோபுரம் பகுதியில் இருந்து பழைய மீன் மார்க்கெட் வரை செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை போராட்டக்குழுவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் மொட்டைக்கோபுரம் பகுதியில் ஊர்வலம் செல்வதற்காக திரண்டனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அனுமதி மறுப்பு 
இந்த நிலையில் அங்கு வந்த தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தார். இதனால் அங்கு கூடியிருந்த போராட்டக்குழுவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதனைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ஊர்வலத்தை 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடத்தி முடித்துக்கொள்ள போலீசார் அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மொட்டை கோபுரம் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே முடிவடைந்தது. தொடர்ந்து உச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் போராட்டக்குழுவினர் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
எஜமான் சுவாமிகள்
இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, அ.ம.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ எஜமான் சுவாமிகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் செந்தில்குமார், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் டி.குருமூர்த்தி, பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் ராசுதீன், அகில இந்திய மகாஜனம் கட்சி நிறுவன தலைவர் நெடுஞ்செழியன், பிராமணர் சங்க மாநில செயலாளர் சூரியநாராயணன், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர் தமீமுல் அன்சாரி மிஸ்பாகி, கத்தோலிக்க திருச்சபை குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி, தொழிலதிபர் ராயா.கோவிந்தராஜன், அனைத்து வணிகர்கள் சங்க செயலாளர் சத்திய நாராயணன், வக்கீல்கள் சங்க தலைவர் லோகநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story