வடக்குமாங்குடியில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் தர்ணா
வடக்குமாங்குடியில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெலட்டூர்:-
வடக்குமாங்குடியில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் கொள்முதல்
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடியில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் கடந்த 5-ந் தேதி திறக்கப்பட்டது. இப்பகுதியில் தற்போது சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக தினசரி ஏராளமான விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளனர் அதனால் கொள்முதல் நிலையத்தில் நெல் அதிக அளவில் தேக்கமடைந்து வருகிறது.
நெல்கொள்முதல் செய்வதற்காக ஒரு வாரத்துக்கு மேல் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் அதனால் கொள்முதல் செய்வதை விரைவுபடுத்த கோரியும், தினசரி ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தலைமையில் விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் தினசரி 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வலியுத்தியும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தேக்கமின்றி எடுத்து செல்ல லாரி வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
விவசாயிகள் போராட்டம் குறித்து நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போராட்டக்குழுவினருடன் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைபடி தினசரி ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்வதாகவும், கொள்முதல் செய்த மூட்டைகளை தடையின்றி எடுத்து செல்ல லாரிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
பரபரப்பு
இந்த போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் செல்வபாரதிகண்ணன், ஒன்றிய விவசாய சங்க செயலாளர் உமாபதி, ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்ராஜ் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக கொள்முதல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story