நோய் பரப்பும் கழிவுநீர் கால்வாய்


நோய் பரப்பும் கழிவுநீர் கால்வாய்
x
தினத்தந்தி 20 Feb 2021 11:12 PM IST (Updated: 20 Feb 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் கால்வாய் நோய் பரப்பி வருகிறது

மதுரை, 
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை ஒட்டி மாநகராட்சி காலனி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் மாநகராட்சி அலுவலர்களுக்கு சொந்தமானதாகும். இந்த காலனியின் கடைசி பகுதியானது ஆரப்பாளையம் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக மிகப் பெரிய சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் கட்டப்பட்டது முதல் தற்போது வரை இங்கு குவியும் மண் அகற்றப்படவில்லை. இதனால், இந்த கால்வாயின் பாதியளவுக்கு மேல் மண் மேடாகி காட்சியளிக்கிறது. இந்த மண் காரணமாக, கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் ஏராளமான பெருச்சாளிகள், பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் வந்து விடுகின்றன. மேலும், இந்த பகுதியில் கொசுத் தொல்லை தீராத பிரச்சினையாக உள்ளது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், "இந்த கழிவுநீர் வாய்க்காலில் தான் ஆரப்பாளையம் பஸ் நிலைய கழிப்பறை நீர் விடப்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுருக்கமாக சொன்னால் இந்த கழிவுநீர் வாய்க்கால் இந்த பகுதி மக்களுக்கு நோய் பரப்பும் கிடங்காக மாறிக் கிடக்கிறது என்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து ஆரப்பாளையம் சாக்கடை கழிவு நீர் கால்வாயில் குவிந்துள்ள மண்ணை அகற்றி கழிவுநீர் முறையாக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story