திடீர் மழையால் வீடுகள்- வயல்களில் தண்ணீர் புகுந்தது
வேப்பந்தட்டை அருகே திடீர் மழையால் வீடுகள்- வயல்களில் தண்ணீர் புகுந்தது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வேப்பந்தட்டை:
கன மழை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் நேற்று திடீரென கன மழை பெய்தது. தொண்டமாந்துறை, விஜயபுரம், கோரையாறு, அரும்பாவூர், அன்னமங்கலம், தழுதாழை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பெய்த பலத்த மழையினால், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை வெள்ளம் காரணமாக தொண்டமாந்துறையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் சின்னப்பொண்ணு, அருள்செல்வி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு, பொக்லைன் எந்திரம் கொண்டு தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரை பொக்லைன் எந்திரம் கொண்டு விவசாயிகள் வெளியேற்றினர்.
கல்லாற்றில் வெள்ளம்
அன்னமங்கலம், அரும்பாவூர் ஆகிய ஊர்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. மேலும் நெல், மக்காச்சோளம், பருத்தி போன்றவை அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் புகுந்ததால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த திடீர் மழையால் கல்லாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே சமயத்தில் வேப்பந்தட்டை மற்றும் அதன் கிழக்குப் பகுதிகளில் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story