சமயபுரம் அருகே தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு 500 காளைகள் பங்கேற்பு; 43 பேர் காயம்
சமயபுரம் அருகே தெற்கு இருங்களூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 43 பேர் காயமடைந்தனர்.
சமயபுரம்,
சமயபுரம் அருகே தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஊராட்சி தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார்.
அருட்தந்தை இன்னொசென்ட் முன்னிலை வகித்தார். லால்குடி ஆர்.டி.ஓ. வைத்தியநாதன் ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினா். அதில் பல காளைகள் அவர்களுக்கு பிடிகொடுக்காமல் துள்ளிக்குதித்து ஓடின. சில காளைகள் களத்தில் சிறிது நேரம் நின்று வீரர்களுக்கு போக்கு காட்டியது.
43 பேர் காயம்
இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் காளைகளை அடக்கியபோது வீரர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உள்பட 43 பேர் காளை முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு உள்ள மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதில் சிலர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். வாடி வாசலின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் ஏறி நின்று அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து பார்த்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று அந்த இடத்தில் கூடியதால் டிபன், ஐஸ்கிரீம், குளிர்பானம் என்று சிறு, சிறு தள்ளுவண்டிகளில் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story