சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை - தேவூர் பகுதியில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்


சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை - தேவூர் பகுதியில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
x
தினத்தந்தி 21 Feb 2021 5:58 AM IST (Updated: 21 Feb 2021 6:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் தேவூர் பகுதியில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.

சேலம்,

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் சுழற்சி காரணமாக சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சேலம் மாநகரில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. 

அதன்பிறகு மதியம் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவியது. இதையடுத்து மாலை 6 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. 
நகரில் பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரம் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் மழையில் நனைந்தவாறு சென்றதை காணமுடிந்தது.  சேலத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷ்ணநிலை நிலவியது.

இதேபோல், மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.

இதனிடையே எடப்பாடி, பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, சித்தூர், கொங்கணாபுரம் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கள்ளுகடை பகுதியில் பலமான காற்று வீசியதில் வாழைமரங்கள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்தன. பருத்தி செடி வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.

தேவூர் அருகே சென்றாயனூர், பாலிருச்சம்பாளையம், வட்ராம்பாளையம், வெள்ளாளபாளையம், அம்மாபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story