வறுமையால் வாழ்க்கையில் விரக்தி: மகனை கொன்று தம்பதி தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
வறுமையால் விரக்தி அடைந்த தம்பதி பூச்சி மருந்து கொடுத்து மகனை கொன்று தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை கொருக்குப்பேட்டை தங்கவேல் பிள்ளை தெருவில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் வீட்டுமனை விற்பனை செய்யும் ரியல்எஸ்டேட் தரகர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சியாமளா (45). இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் (22). பிரவீன் என்கிற பார்த்திபன் மற்றும் விஜயகுமார் ஆகிய 3 மகன்கள் உண்டு. முதல் மகன் கார்த்திக் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இதில் பிரவீன், மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் குடிப்பழக்கம், கஞ்சா புகைப்பது ஆகிய பழக்கங்களூக்கு உட்பட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும் வெங்கடேசனுக்கு கொரோனா ஊரடங்குக்கு பிறகு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனால் பிரவீன், மற்றும் விஜயகுமாரிடம் வேலைக்கு சென்று சம்பாதித்து தருமாறு பெற்றோர் கேட்டதற்கு இருவரும் குடிபோதையில் தாய், தந்தை மற்றும் சகோதரன் கார்த்திக் ஆகியோரை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
வாலிபர் சாவு
இதனால் மனமுடைந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து, அவர்கள் கடைக்கு சென்று கரையானுக்கு அடிக்கும் பூச்சி மருந்து வாங்கி வந்து குளிர்பானத்தில் கலந்து தன் மகன் கார்த்திக்குக்கு கொடுத்துவிட்டு அவர்களும் குடித்துள்ளனர். இதனால் மயக்கமடைந்து மூச்சற்று கிடந்த மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. வெங்கடேசன், சியாமளா இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story