லாரி பிரச்சினை, சாக்கு தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்


லாரி பிரச்சினை, சாக்கு தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
x
தினத்தந்தி 21 Feb 2021 8:00 PM IST (Updated: 21 Feb 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

லாரி பிரச்சினை, சாக்கு தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிக்கல்,

நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அதன்படி கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த மாதம் (ஜனவரி) 23-ந்தேதி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 5-ந்தேதியில் இருந்து தான் விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வர தொடங்கினர்.

வலிவலம், ஆதமங்கலம், சாட்டியக்குடி, கூரத்தாங்குடி, பட்டமங்கலம், ராதாமங்கலம் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் கடந்த 15 நாட்களாக நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது பெய்த கன மழையால் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தது.. எதோ ஓரளவு காப்பாற்றப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளோம். தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அப்படியே கிடக்கிறது.

கடந்த 15 நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரிகள் வருவது இல்லை. அப்படியே வந்தாலும் 1, 2 லாரிகள் மட்டுமே வருகிறது. ஊழியர்களிடம் கேட்டால் லாரிகள் வந்தால் தான் நாங்கள் நெல் மூட்டைகள் அனுப்ப முடியும், லாரிகள் பற்றாக்குறை தான் இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். மேலும் நெல் பிடிக்க சாக்குகள் வந்தாலும் 50 சதவீத சாக்குகள் கிழிந்த நிலையில் உள்ளன.

லாரி, சாக்கு தட்டுப்பாடு

லாரி பிரச்சினை, சாக்கு தட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. பல்வேறு இன்னல்களுக்கு பிறகு அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்து வாங்கிய வங்கி கடனை அடைக்கலாம் என நினைத்திருந்தோம்.

15 நாட்களாக கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கிடப்பதால் தினமும் நாங்கள் அங்கேயே காவல் காக்க வேண்டி உள்ளது. எனவே லாரி பிரச்சினை, சாக்கு தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கம் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story