அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் திருக்கடையூரில், தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று திருக்கடையூரில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருக்கடையூர்,
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நேற்று தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி கவர்னர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து தருமபுரம் ஆதீன தம்பிரான் மீனாட்சிசுந்தரம் பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளித்தார். தொடர்ந்து அவர் கோ பூஜை மற்றும் கஜபூஜை செய்தார். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் வில்வநாதர், விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக மக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி தரிசனம் செய்தேன். கொரோனா தடுப்பூசியை ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. 34 நாட்களுக்குள் ஒரு கோடி தடுப்பூசியை போட்ட நாடு நம்நாடு. அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பிரதமர் விஞ்ஞானிகளின் முயற்சியால் கொரோனாவில் இருந்து விடுபட தடுப்பூசி நமக்கு ஒரு மிகப்பெரிய நல்ல வாய்ப்பாக உள்ளது. கொரோனா தொற்று முழுமையாக நீங்காமல் இருப்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நன்மைகள் நடக்கும்
புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கான நன்மைகள் நடக்கும். நியமன எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுரிமை குறித்த கேள்விக்கு சட்டரீதியாக அனைவரும் பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவபிரியா, பொறையாறு இன்ஸ்பெக்டர் செல்வம், பா.ஜ.க.மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் தங்க வரதராஜன், பூம்புகார் தொகுதி பொறுப்பாளர் அகோரம், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி விஜயஸ்ரீகுமார், ஒன்றிய தலைவர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சட்டைநாதர்கோவில்
இதேபோல சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவிலுக்கு புதுச்சேரி மாநில கவர்னர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். பின்னர் அவர், உமாமகேஸ்வரன், திருநிலைநாயகி, சட்டைநாதர் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். கவர்னருடன், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வெங்கடேசன். ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் அகோரம், நகர தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணை தலைவர் முத்துசாமி உள்பட பலர் உடனிருந்தனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். முன்னதாக கோவில் சார்பில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story