தீக்குளிக்க முயன்ற ஜெராக்ஸ் கடைக்காரர் கைது
கூத்தாநல்லூர் அருகே அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து தீக்குளிக்க முயன்ற ஜெராக்ஸ் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து தீக்குளிக்க முயன்ற ஜெராக்ஸ் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
ஜெராக்ஸ் கடை
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் எள்ளுக்கொல்லை காலனி தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 37). இவர் வடபாதிமங்கலத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் வடபாதிமங்கலத்தில் புனவாசல் கிராமத்தை சேர்ந்த 11 பேரிடம் தலா ரூ. 10 ஆயிரம் பெற்றுக்கொண்டு அரசின் இலவச வீட்டுமனை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 11 பேருக்கும் இலவச வீட்டுமனை அளவீடு செய்வதற்காக வருவாய்த்துறையினர் புனவாசல் கிராமத்திற்கு சென்றனர். அப்போது இலவச வீட்டுமனை வாங்கி கொடுத்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனால் இடத்தை அளவீடு செய்ய கூடாது எனவும் கூறி புனவாசல் கிராம மக்கள் தடுத்தனர். இதனால் இடத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் சென்று விட்டனர்.
சாலைமறியல்
இந்தநிலையில் தாமரைச்செல்வன் செய்த முறைகேட்டை கண்டித்து புனவாசல் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து 11 பேருக்கும் இலவச வீட்டுமனை இடம் அளவீடு செய்வது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புள்ளமங்கலத்தில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தாமரைச்செல்வன் இலவச வீட்டுமனை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.
தீக்குளிக்க முயற்சி
திடீரென தலையில் மண்எண்ணெய்யை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது போலீசார் மற்றும் பொதுமக்கள் தடுக்க முயன்றனர். ஆனால் நான் சாகமாட்டேன். எல்லோரையும் கொளுத்தி காலி செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதையும் மீறி போலீசார் தடுத்தனர். இதுகுறித்து புள்ளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்சுந்தர் (56) வடபாதிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைச்செல்வனை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story