தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வேலூர் மாவட்டத்துக்கு 100 துணை ராணுவத்தினர் வருகிறார்கள்


தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வேலூர் மாவட்டத்துக்கு 100 துணை ராணுவத்தினர் வருகிறார்கள்
x
தினத்தந்தி 21 Feb 2021 10:48 PM IST (Updated: 21 Feb 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வேலூர் மாவட்டத்துக்கு 100 துணை ராணுவத்தினர் வருகிறார்கள்

வேலூர்

சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் வாரியாக வாக்காளர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடியில் 1,000 பேர் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் கூடுதலாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளை இறுதி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேலும் தேர்தலில் போட்டியிட சில கட்சிகள் வேட்பாளரிடம் விருப்பமனு பெற்று வருகிறார்கள். தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வருகிற 25-ந் தேதி மத்திய துணை ராணுவத்தினர் வருகை தர உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 100 துணை ராணுவத்தினர் வருகை தர உள்ளனர்.

100 துணை ராணுவவீரர்கள்

இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவவீரர்களான மத்திய தொழிற் பாதுகாப்பு படையை சேர்ந்த 100 வீரர்கள் வர உள்ளனர்.

வேலூரில் உள்ள திருமண மண்டபம் அல்லது அரசுப்பள்ளியில் துணை ராணுவவீரர்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அவர்கள் தங்கும் இடம், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் கலந்தாலோசிக்க உள்ளோம். அதைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அடுத்த கட்டமாக மேலும் பல்வேறு குழுக்களை சேர்ந்த துணை ராணுவத்தினர் வருவார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story