தர்மபுரி அருகே தி.மு.க. பிரசார பாடலுக்கு நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்திய எம்.பி.-எம்.எல்.ஏ.
தர்மபுரி அருகே தி.மு.க. பிரசார பாடலுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே தி.மு.க. பிரசார பாடலுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
பிரசார பாடல்
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசார பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த கட்சியினர் தங்களது கொள்கைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் பிரசார பாடலாக உருவாக்கி உள்ளனர். அதன்படி தி.மு.க. சார்பில் பிரசார பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு, ஸ்டாலின்தான் வர்றாரு விடியலை தர போறாரு' என்ற வரிகளுடன் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரசார பாடலை ஒலி-ஒளி காட்சியாக பொதுமக்களிடையே வெளிப்படுத்தும் வகையில் தி.மு.க.வினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
எம்.பி.- எம்.எல்.ஏ. நடனம்
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் அவ்வை கோட்டம் முன்பு தி.மு.க. பிரசார பாடல் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் அந்த பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
இதேபோன்று கட்சி தொண்டர்களும் அந்த பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த பிரசார பாடலை பொதுமக்களிடையே ஒளிபரப்பி பிரபலப்படுத்துவோம் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.
Related Tags :
Next Story