கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க போராடிய வீரர்கள்


கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க போராடிய வீரர்கள்
x
தினத்தந்தி 21 Feb 2021 10:57 PM IST (Updated: 21 Feb 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் போராடினர். இதில் 105 பேர் காயம் அடைந்தனர்.

கோவை,

கோவையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் ஆகியவை சார்பில் 4-வது ஆண்டாக கோவையை அடுத்த எல் அண்டு டி பைபாஸ் சாலை அருகே செட்டிப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற்றது. காலை 6 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்திருந்த மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். இதே போல காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் போட்டி நடைபெற்றது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

முன்னதாக சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் காளைக்கு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியை வாசிக்க அதை மாடுபிடி வீரர்கள் அனைவரும் திரும்ப சொல்லி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  போட்டியில் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 943 காளைகளும், 640 வீரர்களும் கலந்து கொண்டனர். இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோரின் காளைகளும் பங்கேற்றன.

முதலில் கோவை சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு காளைகள் ஒவ்வொன்றாக களம் இறக்கப்பட்டன. வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்க மாடு பிடி வீரர்கள் போராடினர்.

காளைகள் திமிறின

வீரர்கள் நெருங்க முடியாத அளவுக்கு பல காளைகள் திமிறின. ஆனாலும் வீரர்கள் துணிச்சலாக நின்று காளைகளை அடக்க முயன்ற னர். சில வீரர்களை காளைகள் பந்தாடின. 

மிகவும் ஆவேசமாக பாய்ந்து வந்த காளைகளை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினார்கள். சில காளைகள் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்ததால் பக்கவாட்டில் இருந்த இரும்பு தடுப்புகள் மீது ஏறி வீரர்கள் தப்பினர்.

வீரர் ஒருவர் அடக்கியதால் ஆவேசம் அடைந்த ஒரு காளை, தனது கூர்மையான கொம்புகளை மண்ணில் குத்தி வாரி வீசியது. பின்னர் அந்த காளையை அதன் உரிமையாளர் ஓட்டிச் சென்றார். 

வீரர்களின் பிடியில் சிக்காத ஒரு காளை, கும்பலாக நின்ற வீரர்கள் மீது பாய்ந்து  ஆவேசத்தை தீர்த்துக் கொண்டது. சில காளைகள் வீரர்களை பின்னங்கால்களால் எட்டி உதைத்தன.

105 பேர் காயம் 

அடக்கப்பட்ட ஒரு காளை மீது உரிமையாளர் வீசிய கயிறு காளையை அடக்கிய வீரரின் கழுத்தில் மாட்டியது. ஆனால் அவர், சுதாரித்துக் கொண்டு தப்பினார். வாடிவாசலில் இருந்து 50 அடி தூரத்துக்கு பிறகு தான் காளைகளின் உரிமையாளர்கள் நிற்க வேண்டும். 

அதை மீறி வந்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்ப டுத்தினார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை புதிய மாடுபிடி வீரர்கள் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 105 பேர் காயம் அடைந்தனர்.

போட்டியை கண்டு ரசிக்க வசதியாக அதிகம் பேர் உட்காரும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக 20 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை புதிய பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களுக்கு குடிநீர், கழிப்பறை, வாகன பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பார்வையாளர்கள்  கைதட்டியும், விசில் அடித்தும் வீரர்களை உற்சாகப்படுத்தினர். போட்டியில் காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் கொண்ட மருத்துவ மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இது தவிர காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடைத் துறை சார்பில் 18 குழுக்களும், பொது சுகாதாரத் துறை சார்பில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது.

 மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திர நாயர், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

சிறந்த வீரர், காளைக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் தங்க நாணயங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ரொக்கத்தொகை உள்பட பரிசுகள் வழங்கப்பட்டன.

 பரிசளிப்பு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளைக்கு சிறந்த காளைக்கான முதல் பரிசும், 2-வது பரிசாக ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரின் காளைக்கும், 3-வது பரிசாக மதுரை மாவட்டம் பனங்கா நத்தம் பகுதியை சேர்ந்த அன்புக்கும் வழங்கப்பட்டது. 

மேலும் சிறந்த மாடுபிடி வீரராக புதுக்கோட்டை மாவட்டம் வாவிரிபட்டியை சேர்ந்த  சந்தோஷ்குமார் 15 காளைகளை பிடித்ததற்காக கார் பரிசு வழங்கப்பட்டது. 

2-வது பரிசாக மோட்டார் சைக்கிள் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி கார்த்திக்கிற்கும்(13 மாடுகள்), 3-ம் பரிசாக ஸ்கூட்டரை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கு(11 மாடுகள்) வழங்கப்பட்டது.

Next Story