அரூர் அருகே விபத்து பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி கிராம மக்கள் சாலை மறியல்


அரூர் அருகே விபத்து பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Feb 2021 11:17 PM IST (Updated: 21 Feb 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.. 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரூர்:
அரூர் அருகே பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 பேர் பலி
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சுக்காக காத்து இருந்தனர். அப்போது அரூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு கார் சாலையோரம் பஸ்சுக்காக நின்று இருந்தவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் அதேபகுதியை சேர்ந்த வெண்மதி (வயது 42), அழகம்மாள் (22), கருத்தம்பட்டியை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் ஸ்ரீநாத் (16) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் புஷ்பா (27), சுமதி (23), தவமணி (52) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல்
இதைப்பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து இறந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அங்கு  திரண்டனர். அவர்கள் விபத்துக்கு காரணமான கார் டிரைவர் மற்றும் காரில் இருந்த மற்றொருவரை சரமாரியாக தாக்கினர்.
சாலை மறியல்
விபத்துக்கு காரணமான டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி  கிராம மக்கள் அரூர்-சென்னை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் அரூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து போலீசார் விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மோதி 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story