முசிறியில் பட்டப்பகலில் துணிகரம்: ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு


முசிறியில் பட்டப்பகலில் துணிகரம்: ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 21 Feb 2021 8:33 PM GMT (Updated: 21 Feb 2021 8:33 PM GMT)

முசிறியில் பட்டப்பகலில் பின்பக்க கதவை உடைத்து ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முசிறி, 
முசிறியில் பட்டப்பகலில் பின்பக்க கதவை உடைத்து ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓய்வு பெற்ற அதிகாரி

முசிறியில் அழகாப்பட்டி சாலையில் பனந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 64). இவர் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைபூட்டி விட்டு முசிறியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதியம் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுதாழ்பாள் உடைக்கப்பட்டு, கதவுதிறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 17 பவுன் தங்க காசுகள், தங்கநகைகள் மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன. 

விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 

 இதுகுறித்து முசிறி அருகே பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க கதவைஉடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பணம், தங்கநகைகளை திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story