கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துதமிழக மக்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துதமிழக மக்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2021 10:15 PM GMT (Updated: 21 Feb 2021 10:15 PM GMT)

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து தமிழக மக்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தேர்தல் பிரசாரம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திறந்த வேனில் நின்றவாறு அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க. தான். நாங்கள் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் ரூ.7 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் கூட இதுபோன்ற திட்டமில்லை. இதன் மூலம் அறிவுப்பூர்வமான மாணவர்களை உருவாக்கி உள்ளோம்.

மின்மிகை மாநிலம்
குடிமராமத்து திட்டத்தின் கீழ் 6,211 ஏரிகள் ரூ.1,417 கோடி செலவில் தூர்வாரப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகம் நீர் மேலாண்மையிலும் சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது. ‌கடந்த தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவியது. எங்களது நிர்வாக திறமையால் தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. கடந்த ஆண்டில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளோம்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உள்ளாட்சி துறையில் மட்டும் 143 விருதுகளை பெற்று உள்ளோம். இந்த மாவட்டத்தில் தரமான சாலைகளை அமைத்ததால், விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கி உள்ளோம். இதேபோல் சிறந்த தலைவர்களுக்கு மணிமண்டபம், சிலைகள் அமைத்து வருகிறோம். அந்த வகையில் அல்லாள இளைய நாயக்கருக்கும் விரைவில் சிலை திறக்க உள்ளோம்.

ரூ.4,500 வழங்கி உள்ளோம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிகப்படியான பரிசோதனைகளை செய்ததால், தற்போது அதன் தாக்கம் குறைந்துள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையின்போது ரூ.1,000 வழங்கினோம். கொரோனா காலத்தில் ரூ.1,000 வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கி உள்ளோம். ஓராண்டு காலத்தில் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கி உள்ளோம். அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 94 ஆயிரம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கி உள்ளோம்.
முதியோர் உதவித்தொகை 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என நான் அறிவித்தேன். 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போகுமிடமெல்லாம் பெட்டியை தூக்கி செல்கிறார். அதில் பொதுமக்களை மனுக்களை போட சொல்கிறார். 3 மாதம் கழித்து முதல்-அமைச்சரான பிறகு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்கிறார்.

கவர்ச்சி திட்டங்கள்
தி.மு.க. 5 முறை ஆட்சி செய்து உள்ளது. அப்போது அவர்கள் நாட்டு மக்களை பார்க்கவில்லை. வீட்டு மக்களை தான் பார்த்தார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மனு வாங்கினீர்கள். தற்போது அந்த மனுக்கள் எங்கே போனது. தொடர்ந்து தி.மு.க. பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை அவர்கள் மறந்து விடுவார்கள். தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக ஏன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.

முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் நாங்கள் 9 லட்சத்து 70 ஆயிரம் மனுக்களை பெற்று உள்ளோம். அதில் 5 லட்சத்து 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். தற்போது 1,100 என்கிற எண்ணை அறிமுகம் செய்து உள்ளோம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள்.

ஏராளமான அறிவிப்புகள்
தமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் கட்டி தருவதற்கு பிரதமர் மோடி உறுதி அளித்து உள்ளார். தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிர இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வரும். விவசாயிகள் ஏற்றம் பெற அரசு துணை நிற்கும். வருகிற சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலர செய்ய வேண்டும்.   இவ்வாறு அவர் பேசினார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி. பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story