செல்போன் பேசியபடி அரசு பஸ்களை இயக்கிய 2 டிரைவர்கள் பணி இடைநீக்கம்; போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை
செல்போன் பேசியபடி அரசு பஸ்களை ஓட்டிய 2 டிரைவர்களை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செல்போன் பேசியபடி...
அரசு பஸ்களில் டிரைவர்கள் செல்போன் பேசியபடி பஸ்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. அந்த வகையில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு பஸ்களில் செல்போன் பேசியபடி டிரைவர்கள் பஸ்களை இயக்குகிறார்களா? என்பது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி கடந்த 15-ந் தேதி டவுன் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை ஓட்டிய டிரைவர், செல்போன் பேசியபடி இருந்தார். இதை பார்த்த டிக்கெட் பரிசோதகர்கள் இது குறித்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
பணி இடைநீக்கம்
இதையடுத்து அந்த பஸ்சை இயக்கிய டிரைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதேபோல், நாமக்கல்லிலும் செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும் போது, ‘பணியின் போது செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிரைவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சில டிரைவர்கள் பஸ்களை இயக்கி வருவதாக புகார் எழுந்தது. அந்த வகையில் சமீபத்தில் செல்போன் பேசியடி பஸ்களை இயக்கிய 2 டிரைவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
Related Tags :
Next Story