சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமியின் படிப்பு செலவுக்கு தனது சொந்த செலவில் இருந்து ரூ.5 லட்சம் நிதியை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
சாத்தூர், பிப்.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தாய்-தந்தையை இழந்த சிறுமியின் படிப்பு செலவுக்கு தனது சொந்த செலவில் இருந்து ரூ.5 லட்சம் நிதியை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
பயங்கர வெடிவிபத்து
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ந்தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் நடுசூரங்குடியை சேர்ந்த பாக்கியராஜ்-செல்வி தம்பதியினரும் உயிரிழந்தனர். இவர்களது 12 வயது மகள் நந்தினி தாய், தந்தையை இழந்து தவிக்கிறாள். 7-ம் வகுப்பு படிக்கும் அச்சிறுமியின் வீட்டுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அவளுக்கு தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை வழங்கினார்.
மேலும் அந்த சிறுமி 12-ம் வகுப்பு வரை படிப்பதற்கு ரூ.5 லட்சம் நிதியினை தனது சொந்த செலவில் இருந்து வழங்கினார். சிறுமியின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவு உள்ளிட்டவைகளுக்கும் தானே உதவிகளை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரபரட்சமின்றி உதவி
பட்டாசு வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமிக்கு தமிழக அரசு வழங்கிய ரூ.6 லட்சம் நிதி அவளது வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது எனது சொந்த செலவில் இருந்து நிதி வழங்கியுள்ளேன். ஏற்கனவே நான் கூறியபடி இந்த குழந்தையை எனது சொந்த குழந்தையாக நினைத்து அனைத்து உதவிகளும் செய்து கொடுப்பேன்.
நமது மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் தொழிலாளர்கள் எந்த நிலையில் பாதிக்கப்பட்டாலும் நான் பாரபட்சமின்றி உதவி செய்வேன்.
இனிமேல் இது போன்று பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். எங்கள் கவனத்திற்கு வருகின்ற அத்தனை பேரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அதற்கு தேவை நடவடிக்கைகளை எடுப்பதற்கு முதல்-அமைச்சர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து உள்ளார்.