முட்புதரில் சிக்கி மிளா மான் சாவு


முட்புதரில் சிக்கி மிளா மான் சாவு
x
தினத்தந்தி 22 Feb 2021 2:26 PM GMT (Updated: 22 Feb 2021 2:26 PM GMT)

கம்பம் அருகே முட்புதரில் சிக்கி மிளா மான் பரிதாபமாக இறந்தது.

கம்பம்:
கம்பம் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து நேற்று காலையில் மிளா மான் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. 

அங்கு தனியார் சிறுவர் பூங்கா அருகே உள்ள புளியந்தோப்பிற்குள் ஓடியது. பின்னர் பொதுமக்கள் வருவதை பார்த்து மிரண்டு ஓடி கோசேந்திர ஓடையை கடந்து முட்புதருக்குள் சிக்கியது. 

தகவலறிந்த கம்பம் கிழக்கு வனச்சரகர் சுரேஷ்குமார், மேற்கு வனச்சரகர் அன்பு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மிளா மானை உயிருடன் பிடிக்க முயன்றனர். 

ஆனால் முட்புதரில் சிக்கி வெளியே வர முடியாமல் மிளா மான் திணறியது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் அந்த மிளா மானை பிடித்தனர். 

ஆனால் பிடிபட்ட சிறிது நேரத்தில் மிளா மான் பரிதாபமாக இறந்தது. அது சுமார் 4 வயது உடைய ஆண் மிளா மான்  என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த மிளாமானின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி, கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலக வளாகத்திற்கு கொண்டு  சென்றனர்.

 அங்கு மிளா மான் உடல் கால்நடை டாக்டர் செல்வம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Next Story