மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் மனைவி தீக்குளிக்க முயற்சி + "||" + Attempt to set fire to soldiers wife

ராணுவ வீரர் மனைவி தீக்குளிக்க முயற்சி

ராணுவ வீரர் மனைவி தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ராணுவ வீரர் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி:

தீக்குளிக்க முயற்சி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டர் கார் முன் வந்த ஒரு பெண் பையில் இருந்து டீசல் நிரப்பிய ஒரு லிட்டர் கேனை எடுத்தார். 

அந்த கேனில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஓடிச் சென்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர்.

விசாரணையில் அந்த பெண் உத்தமபாளையத்தை சேர்ந்த சுரேஷ் மனைவி சித்ரா என்பது தெரியவந்தது. 

தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் சித்ரா கூறுகையில், "எனது கணவர் ராணுவ வீரராக உள்ளார். எங்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 

எனக்கும், எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வழக்கு நடந்து வருகிறது. இதில் எனக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. 

எனது கணவரின் வீட்டில் நான் குழந்தைகளுடன் வசித்து வந்தேன். எனது கணவரின் குடும்பத்தினர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். 

தற்போது நான் வத்தலக்குண்டுவில் எனது பெற்றோர் வீட்டில் உள்ளேன். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. 

என்னை அதே வீட்டில் எனது குழந்தைகளுடன் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பின்னர் அவரை போலீசார் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்
இதேபோன்று, பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாண்டீஸ்வரி (வயது 25) தனது அண்ணன்கள் முருகன், முனீஸ்வரன் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். 

நுழைவு வாயிலில் அவர்கள் கொண்டு வந்த பைகளை போலீசார் சோதனை செய்த போது பாண்டீஸ்வரி கொண்டு வந்த பையில் 2 லிட்டர் கேனில் அரை லிட்டர் அளவில் மண்எண்ணெய் இருந்தது. போலீசார் அந்த கேனை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தங்களின் தாய் காமாட்சியம்மாள் பெயரில் குள்ளப்புரத்தில் உள்ள 10 சென்ட் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த நபர் அபகரித்துக் கொண்டு மிரட்டுவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினர். 

மண்எண்ணெயை கவனக்குறைவாக எடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர்களை தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். 

விசாரணைக்கு பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.