பருவ நிலை மாற்றத்தால் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் கடல் அரிப்பு அதிகரிப்பு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க டென்மார்க் அமைப்பினர் வலியுறுத்தல்
பருவநிலை மாற்றத்தால் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கோட்டையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க டென்மார்க் நாட்டை சேர்ந்த அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
பொறையாறு:-
பருவநிலை மாற்றத்தால் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கோட்டையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க டென்மார்க் நாட்டை சேர்ந்த அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
நிவர்- புரெவி புயல்
கடந்த ஆண்டு (2020) இறுதியில் நிவர், புரெவி என அடுத்தடுத்து புயல்கள் உருவாகின. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே உள்ள அலை தடுப்பு பாதுகாப்பு சுவர் உள்ளிட்ட பகுதிகள் அலை சீற்றத்தில் சேதம் அடைந்தன.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையின் அருகே கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டை மதில் சுவரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த கடல் அலைகள், தற்போது மணலை அரித்து, 10 மீட்டர் தொலைவிற்குள் வந்து விட்டது.
புயல் பாதிப்பு
டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அலை தடுப்பு கருங்கல் சுவர் சமீபத்தில் தாக்கிய புயல்கள் பாதிப்பால் ஏற்பட்ட கடல் அலைகளின் கடும் சீற்றத்தால் சேதம் அடைந்தது. இதுதவிர கோட்டை மதில் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த முள்வேலி தடுப்பு சுவரும் சேதம் அடைந்தது. எனினும் டேனிஷ் கோட்டை எவ்வித சேதமும் இன்றி தப்பியது. தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால், கடல் அரிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அலைகள் தாக்கும் அபாயம்
கடல் அரிப்பு தொடர்ந்தால், டேனிஷ் கோட்டையின் சுவரை அலைகள் தாக்கும் அபாயம் உள்ளது. டேனிஷ் கோட்டை மற்றும் தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தரங்கம்பாடி பகுதி மக்கள் மட்டுமல்லாமல், டென்மார்க் நாட்டில் இயங்கி வரும் அமைப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தமிழக சுற்றுலாத் துறை மற்றும் தமிழ் பண்பாடு-கலாச்சார துறை அமைச்சர்களுக்கு, டென்மார்க் நாட்டில் இயங்கி வரும் “டேனிஷ்-டிராங்குபார் அசோசியேஷன்” என்ற அமைப்பின் தலைவர் பவுல் பீட்டர்சன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘கி.பி.1620-ம் ஆண்டு டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜய ரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலைநயத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர்.
சுற்றுலா பயணிகள்
2 ஆண்டு காலத்துக்குள் இந்த கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோட்டையில், 10-க்கும் மேற்பட்ட அறைகள் உண்டு. இந்திய அரசின் அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன், இந்த கோட்டை பாதுகாப்பு பணியில் டென்மார்க் நாட்டவரும் பங்கேற்றனர்.
இந்தக் கோட்டையில் தற்போது தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. டேனிஷ் காலப் பொருட்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அருங்காட்சியகமும், டேனிஷ் கோட்டையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. தற்போது கடல் அரிப்பு டேனிஷ் கோட்டையை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆகவே காலம் தாழ்த்தாது உடனடி நடவடிக்கை எடுத்து கோட்டை அருகே, அதிக உயரம் மற்றும் அகலம் கொண்ட கருங்கல்லால் ஆன தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story